புதன், 9 ஜூன், 2010

கை கழுவிய நிகழ்ச்சி "கின்னஸ்' சாதனையானது


சென்னை : "பதினைந்தாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கை கழுவிய நிகழ்ச்சி, "கின்னஸ்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது' என சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: சுகாதாரமாக கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி, "உலக கை கழுவும் நாளாக' கடைபிடிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் சிறு கரண்டி மற்றும் முள் கரண்டிகளை உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 90 சதவீதம் மக்கள் உணவு உண்பதற்கு கைகளையே பயன்படுத்துகின்றனர். கைகள் சுத்தமில்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுநோய், சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையில் இருந்து வந்த பிறகும் சோப்பு போட்டு கை கழுவுதல் மிகவும் அவசியம். இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவீதம் கட்டுப்படுத்த முடியும். உலகத்தில் 15 லட்சம் குழந்தைகள் வயிற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கை சுத்தம் இல்லாதது தான். இதனடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 15 ஆயிரத்து 115 மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் கை கழுவும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி "கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு சுப்புராஜ் கூறியுள்ளார்.

செவ்வாய், 1 ஜூன், 2010

வீடு-வாகன கடன் வட்டியை குறைத்த இந்தியன் வங்கி



சென்னை: வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்தியன் வங்கி குறைத்துள்ளது.

இதன்படி 5 வருடத்தில் திரும்பச் செலுத்தும் ரூ. 20 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டி 10.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ. 20 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையான கடனுக்கான வட்டி 11.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைக்கப்படும் என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. தற்போது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட்டி விகிதம் திருத்தி அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கார் கடன்:

மூன்று ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் கார் உள்ளிட்ட வாகனக் கடனுக்கான மாறாத வட்டி விகிதம் 11 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் கால அளவுள்ள கடனுக்கான வட்டி 11.25 சதவீதத்திலிருந்து 10.25 சதவீதமாகக் குறைக்கப்பகிறது.

இரு சக்கர வாகனம்:

இரு சக்கர வாகனக் கடனுக்கான வட்டி 13 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 2 வருட முடிவில் மாற்றி அமைக்கப்படும் என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.