திங்கள், 9 பிப்ரவரி, 2009

சிறுவர்களின் சிந்தனை

‘ஆணும் பெண்ணும் சமமா?’’ என் கேள்வி அங்கே குழுமியிருந்தவர்களிடம் எவ்வித இடறலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உடனே அறிந்து மகிழ்ந்தேன். ஏனெனில் உடனே சிறுமிகள் மத்தியில் ‘சமம், சமம்’ என இரண்டு முறை குரல்கள் ஒலித்தன. ஆனால் சிறுவர்கள் ஏதும் பேசாமலிருந்தனர். இது சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்னுள்.
‘‘என்ன ஆம்பிளைப் பிள்ளைகளெல்லாம் பேசாமலிருக்கீங்க?’’ சாம்பலைக் கிளறியது போலிருந்தது என் கேள்வி.
‘‘என்ன பேசாம இருக்கீங்க?’’ பூட்டுத் துவாரத்தில் சாவியைத் திருகுவது போல் திரும்பவும் என் குடைச்சல் ஒலித்தது.
‘‘அவங்க சொல்றது சரிதான் டீச்சர். ஆனா…’’
‘‘என்ன ஆனா? ஆவன்னா?’’ எனது ஆவன்னாவினால் சற்றே பயந்த சிறுவர்கள், ‘‘ஆனா அவங்க சுதந்திரமா இல்லையே’’ என்ற ஒரு சிறுவனின் குரலால் தங்களை வெளிப்படுத்தினார்கள்.
பரவாயில்லையே என்று வியந்து கொண்ட நான் விபரங்கேட்டேன்.
‘‘பின்னே என்ன டீச்சர், அவங்க சாயந்தரம் ஆனா வீட்டுக்குள்ளே அடைஞ்சி டி.வி. சீரியல் பாக்கிறாங்க. எங்களைப் போல வெளியே வந்து வெளையாட மாட்டேங்குறாங்களே!’’ சிறுவன் ஒருவன் சொல்லவும், மற்ற சிறுவர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
உடனே ஒரு சிறுமி எழுந்து ‘‘நாங்களா வெளியே விளையாட மாட்டேங்குறோம். எங்களை வெளியே விளையாட விட்டாத்தானே? எங்களுக்கு சு£தந்திரமே இல்ல’’ என்றார்கள். மற்ற சிறுமிகள் ஆமோதித்தனர்.
‘‘ஒருவேளை பெண்கள் மட்டும் விளையாட கிராமத்திலே விளையாட்டுத்திடலும் அதற்கான உபகரணங்களும் இருந்தால் பெண்களும் விளையாடுவார்கள்தானே?’’
சிறு விதையைப் போட்டு வைத்தேன். எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான_ குறிப்பாக இளம் பெண்கள் விளையாடுவதற்கான_ இடத்தையும் அவர்களின் வகைவகையான விளையாட்டுக்களையும் பற்றி நான் கற்பனை செய்யத் துவங்கினேன் என்பது வேறு விஷயம்.
‘‘எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான இடங்களை யார் ஏற்படுத்தித்தர முடியும்?’’ நான் கேட்டேன்.
‘‘அந்தந்தப் பள்ளிக்கூடங்கள்’’
‘‘அவன் சொல்றது தப்பு டீச்சர். அரசாங்கம்தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.’’
சரியான விடை சொல்லிய சிறுமியைப் பாராட்ட ஒரு ‘சபாஷ்’ உடன் ஒரு பத்து ரூபாய்த்தாள் பரிசளிக்கப்பட்டது. பரிசு பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் பேச வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்கியதாக நான் எண்ணிக்கொண்டேன்.
‘‘எந்த அரசாங்கம் இதுவரை பெண்களைப் பற்றி அதிகம் சிந்தித்து அக்கறையுடன் செயல்பட்டுள்ளது?’’ என் கேள்வி குழப்பத்தை _ அதாவது மத்திய அரசாங்கமா அல்லது மாநில அரசாங்கமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணினேன். ஆனால் குழப்பமேயில்லாமல் மாணவிகளிடமிருந்து பதில் வந்தது.
எந்த அரசும் இதுவரை பெண்கள் குறித்து அக்கறையுடன் செயல்படவில்லை என்பது அவர்கள் பதிலாக இருந்தது. அந்த ஒருமித்த குரல் ஆச்சரியப்படுத்தியது. பெண் குழந்தைக் கல்வி உதவித் திட்டம், திருமண உதவித்திட்டம், பேறுகால உதவித்திட்டம், விதவைகள் பென்ஷன் திட்டம், கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் திட்டம், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு திட்டம், வரதட்சனை ஒழிப்புச் சட்டம், சிசுக்கொலை தடுப்புச்சட்டம், விவகாரத்து ஜீவனாம்சத்திற்கான சட்டம், ஆண் பெண் சமக்கூலி சட்டம், மற்றும் சமீபத்திலான குடும்ப வன்முறைச் சட்டம் ஆகிய இத்தனைச் சட்டங்களும் பல்வேறு திட்டங்களும் இயற்றப்படும் சிறு பெண் குழந்தைகள் சிந்தனையில் தாங்கள் போதுமான அளவு அக்கறையுடன் கவனிக்கப்படவில்லை என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதை எண்ணினேன். இவையாவும் ஆண் பெண் சமத்துவத்தையும், பெண் சுதந்திரத்தையும் அளித்து விடவில்லை என்பதை அவர்களது புரிதல் உணர்த்தியது.
‘‘எந்த அரசும் பெண்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்றால் பெண்களே ஆட்சி செய்யும்போது பெண்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று நம்பலாமா?’’
ஆம் என்றார்கள் அனைத்து மாணவிகளும்! சிறுவர்கள் வழக்கம்போல் அமைதி காத்தனர்.
‘‘பெண்களே ஆட்சி செய்ய வேண்டுமென்றால் பெண்களுக்கான தனி அரசியல் கட்சி வேண்டுமே? பெண்கள் தங்களுக்கென ஒரு அரசியல் கட்சியைத் துவங்கினால் எப்படியிருக்கும்?’’
விளையாட்டாய்க் கேட்டேன் அவர்களிடம்.
‘‘ரொம்ப சூப்பரா இருக்கும்!’’ சந்தோஷத்துடன் ஆரவாரத்துடன் சிறுமிகள் கோஷமிட்டனர்.
‘‘அடேயம்மா’’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன்.
‘‘என்ன பசங்களா, எல்லோரும் மௌனமா இருக்கீங்க? பெண்கள் அரசியல் கட்சியைத் துவக்கினால் எப்படியிருக்கும் என்று நீங்கள் சொல்லவில்லையே?’’
அவர்கள் விடாது மௌனம் காக்கவே, சிவப்புக் கலர் சட்டை அணிந்திருந்த பையனை எழுப்பிவிட்டேன். சிவப்பு முற்போகின் வண்ணமல்லவா? அவன் எழுந்தான். அவசரமான குரலில்,
‘‘நாடு நாசமாப்பூடும்’’ என்றான். எல்லா சிறுவர்களும் கைதட்டினார்கள், அவனுடை வெளிப்பாட்டை ஆதரித்து.
நாசமாய்ப்போகிற அந்த எண்ணத்தை ஆதரித்து விளக்கம் கேட்க விரும்பாமலும், சிறிய குழந்தைகளை மேலும் கேள்விகள் அல்லது விளக்கங்கள் கேட்டு வற்புறுத்த வேண்டாம் என்பதினாலும் மாணவிகளை நோக்கி கேள்விகளை எறிந்தேன்.
‘‘ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். பெண்கள் தனி அரசியல் கட்சி துவங்கினால் எல்லாப் பெண்களும் அதில் உறுப்பினர்கள் ஆவார்களா?’’
‘‘ஓ. நிச்சயமா டீச்சர்’’ கோரஸ்.
‘‘சரி, உங்களுக்குப் போதிய அதிகாரம் கிடைக்கவில்லை என்பதற்காகத்தானே தனி அரசியல் கட்சி துவக்குகிறீர்கள், வாருங்கள் உங்களுக்கு அதிகாரம் தருகின்றோம் என்று இப்போதிருக்கும் அரசியல் கட்சிகள் அழைத்தால் போய்விடுவீர்களா?’’
‘‘சத்தியமாக மாட்டோம்.’’
இவர்கள் என்ன சிறுமிகளா அல்லது அரசியல் மாணவிகளா என்று எனக்கு நம்புவதற்குக் கடினமாக இருந்தது. உடனிருந்த கலையரசன் சற்று பதற்றத்துடன் ‘‘அம்மா கேட்கிறாங்களேன்னுதானே நீங்க இப்படி பதில் சொல்றீங்க? உண்மையைச் சொல்லுங்க’’ என்றார்.
‘‘உண்மையைத்தான் சொல்கிறோம்.’’
‘‘அப்போ பெண்களுக்கான அரசியல் கட்சியைத் துவக்கிடலாம்னு சொல்லுங்க’’ என்று ஏமாற்றத்துடன் ஆசிரியர் ஒருவர் கூறினார்.
‘‘சார், பெண்களுக்கான அரசியல் கட்சியை ஆண்கள் துவக்க முடியாது.’’ அவர்களில் ஒரு பெண் எழுந்து உரத்த குரலில் கூறினாள்.
ஆசிரியர் கப்சிப்.
‘‘சரி, பெண்கள் கட்சியில் ஆண்கள் இருக்கலாமா?’’ என்னுடைய கேள்விக்கு முதலில் முடியாது என்றும் பிறகு நல்ல ஆண்களை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பதில் வந்ததும் அவர்கள் பதிலில் ஆண்களையும் அரவணைக்கும் தாய்க்குணம் வெளிப்பட்டதால்,
‘என்ன பசங்களா, பெண்கள் தங்கள் கட்சியைத் துவக்கி விட்டார்கள். உறுப்பினராக சேர்வதற்குத் தயாரா?’’ என்று அவர்களை நோக்கி ஆவலுடன் கேட்டேன்.
‘‘செத்தாலும் அந்தக் கட்சியில் நாங்கள் சேரமாட்டோம்.’’ இப்படி சிறுவர்கள் உறுதியுடன் கூறினார்கள்.
சமூக ஏற்றத்தாழ்வுகளோடு ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளும் விஷமூட்டிய வித்துக்களின் முளைகள் போல் வீரியத்துடன் வளர்ந்து வந்திருக்கின்றன என்றெண்ணி வியப்பும் வருத்தமுங் கொள்ளாதிருக்க இயலவில்லை என்னால்.
பதினைந்து வயதிற்குற்பட்ட சிறுமி _ சிறுவர்களிடையே இப்படிப்பட்ட எண்ணங்கள் என்றால் பெரிய விருட்சமாகி அனுபவத்தில் கிளைத்த வேர்களில் எத்தனை உரமிருக்கும்?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செய்யாறுக்கு அருகேயிருக்கும் ஊரொன்றில் வேறொரு வேலையாகப் போன சிவகாமி, பள்ளி மாணவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியதன் சாராம்சந்தான் மேலே இருப்பது. தொடர்ச்சியை ஏப்ரல் மாத தீராநதியில் படிக்கலாம். இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு பள்ளிக்கூடத்திலும் இதே கேள்விகளும் பதில்களும் மேலே இருப்பதுபோலவே இருந்ததாக சிவகாமி சொல்கிறார்.
இஸ்ரேல், போலந்து, க்ரீன்லாந்து போன்ற நாடுகளில் பெண்களுக்கான கட்சி என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் உருவானாலும் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை. சில வருடங்களுக்குப்பிறகு அந்தக் கட்சிகள் இருந்த சுவடே தெரியாமற்போனது.
ஆனாலும், மேலே அந்தச் சிறுமிகளின் சிந்தனை யோசிக்க வைக்கிறது இல்லையா. எங்கே ஒரு மூலையில் இருக்கும் கிராமத்துச் சிறுமிகள் இவ்வளவு தெளிவுடன் இருப்பது நம்பிக்கை கொடுக்கிறதுதான்.